ராஜஸ்தானில் தனது காருக்கு முதலில் பெட்ரோல் நிரப்பாத ஆத்திரத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர் பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பில்வாரா மாவட்டம் ஜஸ்வந்த்புராவில் உள்ள பெட்ரோல் பங்கில் நீதிபதி சோட்டுலால் சர்மா தனது காருக்குப் பெட்ரோல் நிரப்புவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது முதலில் வந்த இவரது காருக்குப் பதிலாகப் பெட்ரோல் பங்க் ஊழியர் வேறொரு காருக்குப் பெட்ரோல் நிரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சர்மா, ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே கைகலப்பாக மாறியது.
இந்த சம்பவம் குறித்து சோட்டுலால் அளித்த புகாரின் பேரில் 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சோட்டுலாலின் மனைவி தீபிகா வியாஸும், ஊழியர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு புகாரளித்துள்ளார். தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.