மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, மீண்டும் தலைதூக்க சதித் திட்டம் தீட்டுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த அமைப்பில் தொடர்புடைய தலைமறைவான நபர்களை, கண்காணிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது புலனாய்வு அமைப்பு.
சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாகக் கடந்த 2022ம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகள் செயல்பட 5 ஆண்டுகள் தடைவிதித்தது மத்திய உள்துறை அமைச்சகம். நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, நிதியளிப்பது, கொடூரமான கொலைகளை அரங்கேற்றுவது என அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டதன் காரணமாகப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புத் தடை செய்யப்பட்ட நிலையில், அதனைப் புலனாய்வு அமைப்புகள் கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே வைத்திருக்கின்றன.
கடந்த 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகளை பரப்பிச் செயல்பட்டு வந்தது. 2022ம் ஆண்டு இந்த அமைப்புத் தடை செய்யப்படுவதற்கு முன்னர், அந்த அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. அப்போது வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிகளவிலான பணம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வந்ததது தெரியவந்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த அமைப்பு புதிய உத்தியுடன் மீண்டும் தலைதூக்க திட்டமிட்டுள்ளதாகப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன… அந்த அமைப்புத் தடை செய்யப்படுவதற்கு முன்னர், ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருந்தாலும், பலர் தலைமறைவு வாழ்க்கையை தொடர்கின்றனர்.
PFI சித்தாந்தத்தின் அடிப்படையான நோக்கத்தைப் பாதுகாக்கும் அவர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளில் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க ஊக்குவிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. மத்திய அரசு தடைவிதித்த பின்னர், அந்த அமைப்பு வெளிப்படையாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதது போல் தோற்றத்தைத் தந்தாலும், ஒரு பிரிவு அதன் சித்தாந்தத்தை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இது அந்த அமைப்பு மீண்டும் மறுமலர்ச்சி பெறும் சாத்தியக் கூறுகளை உணர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக 2001ம் ஆண்டுத் தடை செய்யப்பட்ட SIMI அதாவது இந்திய இஸ்லாமிய இயக்கம், 2008ம் ஆண்டு IM அதாவது இந்திய முஜாஹிதீன் எனத் தனது பெயரை மாற்றிக் கொண்டு இயங்கத் தொடங்கியது… இதே பாணியை அணுகுமுறையை PFI-யும் கையாளும் என்று தெரிகிறது.
PFI போன்றே, SIMI தனது ஆதரவாளர்களை தலைமறைவாக இருக்கவும், செயல்பாடுகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியிருந்தது. அதே நேரத்தில் சில உறுப்பினர்கள் தங்கள் சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளில் சேரவும் அறிவுறுத்தியது.
இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயருடன் மீண்டும் தோன்றிய நேரத்தில், வலிமையான அமைப்பாக மாறியிருந்தது. PFI தொடக்கத்தில் கேரளாவை தளமாகக் கொண்டு இயங்கினாலும், பின்னர் 25 மாநிலங்களில் கிளையை விரிவுபடுத்தியது.
வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வஹாபி போதகர்களின் செல்வாக்காலும், தடையற்ற நிதி பரிமாற்றத்தாலும், சிந்தாந்தத்தை பரப்புவதில் கவனம் செலுத்தியது… PFI பல வட மாநிலங்களுக்கு அதன் எல்லையை விரிவுபடுத்திப் பீகாரில் குறிப்பிடத் தக்க இருப்பை நிலைநாட்டியதால், அந்த அமைப்பு மீண்டும் எழுச்சி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் எங்கும் இருப்பதாகப் புலனாய்வுஅமைப்பு எச்சரித்துள்ளது.