வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், சிறுதானிய வகையைச் சேர்ந்த சாமை பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் சாமை பயிற்கள் நீரில் மூழ்கியதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக மலை வாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போன்று, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், தமிழக அரசு உடனடியாக ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















