இளையான்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளரான சங்கர் என்பவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.
சங்கரின் மனைவி 3 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், சங்கரின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யக் கோரியும், சங்கரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் மூன்று முக்கு சாலையில் 200க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு அக்டோபர் 23 முதல் 31ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
















