இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது சிலைகளுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியாரின் படை தளபதியாக இருந்த மருது சகோதரர்கள் 1758 முதல் 1801 வரை ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். மருது சகோதரர்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் 1801ஆம் ஆண்டு திருப்பத்தூரில் இருவரையும் தூக்கிலிட்டனர்.
காளையார்கோயிலுக்கு எதிர்புறம் இருவரும் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி மருது சகோதரர்களின் குருபூஜை விழா அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான குருபூஜை விழாவையொட்டி திருப்பத்தூர் உள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
இதனை அடுத்து, மாமன்னர் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர் சமுதாயம் மருது பாண்டியர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இளைஞர்கள் மரியாதை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
















