பாரிஸில் உள்ள லூவ்ரே Louvre அருங்காட்சியகத்தில் 7 நிமிடங்களில் கொள்ளையடிக்கப் பட்ட மாவீரன் நெப்போலியன் காலத்து நகைகளின் மதிப்பு 102 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அது மீண்டும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் பிரபலமான லூவ்ரே Louvre அருங்காட்சியகம் உள்ளது. சுமார் 6,52,300 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த அருட்காட்சியகம், உலகின் மிகப் பெரியஅருங்காட்சியகமாகக் கருதப் படுகிறது.
தினமும், 30,000க்கும் மேற்பட்டோர் பார்வையிடும் இந்த அருங்காட்சியகத்தில் உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் உட்பட ஏராளமான ஓவியங்கள், நெப்போலியன் கால நகைகள், வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள், பழமையான சிற்பங்கள் என 33,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் காட்சியகத்தில் உள்ள, ‘அப்பல்லோ கேலரி’யில் பிரான்ஸ் நாட்டின் மன்னர்கள் மற்றும் மகாராணிகளின் விலைமதிப்பற்ற நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்த விலைமதிப்பற்ற வரலாற்று சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து, ‘ஹைட்ராலிக்’ ஏணி உதவியுடன் அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றுள்ளனர். பின்னர், கண்ணாடியை உடைத்து கேலரிக்குள் புகுந்து, அங்கிருந்த மாவீரன் நெப்போலியன் காலத்து விலைமதிப்பற்ற ஒன்பதுநகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அப்பல்லோ கேலரி மூடப்பட்டுள்ளது. 5 நிமிடங்களில்இந்தக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் லாரென் நுன்சே உறுதிபடுத்தியுள்ளார்.
அருங்காட்சியகத்திலிருந்து கிரீடங்கள், நெக்லஸ், காதணிகள் என ஒன்பது பொருட்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திருடு போன நகைகளின்பட்டியலைப் பிரான்ஸ் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னர் முதலாம் பிரான்சிஸ் காலத்து ரத்தினங்கள் பொருத்தப்பட்ட இரண்டு கீரிடங்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன.
1853ம் ஆண்டு, பேரரசி யூஜினிக்கு, மூன்றாம் நெப்போலியன் வழங்கிய 200க்கும் மேற்பட்ட முத்துக்கள் மற்றும் 2,000 வைரங்கள் உள்ள கிரீடமாகும். இன்னொரு கிரீடம், ராணி மேரி-அமெலி மற்றும் ராணி ஹார்டென்ஸ் அணிந்திருந்த 24 சிலோன் நீலக்கற்கள் மற்றும் 1,083 வைரங்கள் கொண்ட நட்சத்திர தலைக்கவசம் ஆகும்.
1810ம் ஆண்டு மாமன்னர் நெப்போலியன் தனது இரண்டாவது மனைவி ஆஸ்திரியாவின் மேரி-லூயிஸுக்கு திருமண பரிசாக வழங்கிய ஒரு மரகத நெக்லஸ்ஸும் காதணிகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில், 32 நுணுக்கமாக வெட்டப்பட்ட மரகதக் கற்களும் 1,138 வைரங்களும் பொருத்தப் பட்டிருந்தன.
1,354 வைரங்கள் மற்றும் 56 மரகத கற்கள் பதிக்கப்பட்டு, தங்க கழுகுபோல் வடிவமைக்கப்பட்டு பேரரசி யூஜெனி அணிந்திருந்த கிரீடத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பின் அதைத் தவற விட்டுச் சென்றுள்ளனர். பிறகு அது ஒரு சாக்காடையில் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
102 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நகைகள் கொள்ளைடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெறும் நகைகள் மட்டுமல்ல என்றும், பிரான்ஸ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட குடும்ப நினைவுப் பொருட்கள் என்றும் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பழமைவாத சட்டமன்ற உறுப்பினர் மாக்சிம் மிச்செலெட், லூவ்ரே உட்பட நாட்டின் பிற கலாச்சார மையங்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். லூவ்ரே அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன என்பதை அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொள்ளையடித்த நான்கு பேரைப் பிடிக்க,100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கொள்ளை அடித்தவர்களும் தீவிர தேடுதல் வேட்டையில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க நகைகளை வாங்கும் நபர்களுக்கும் சிறை தண்டனை உண்டு என்பதால் நகைகளை அவ்வளவு எளிதில் யாரிடம் விற்க முடியாது.
எனவே விற்கவும் முடியாமல் வைத்திருக்கவும் முடியாமல் கொள்ளையர்கள் திண்டாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த நகைகளில் உள்ள ரத்தினங்கள் உடைக்கப்பட்டு விற்கப்பட்டால், உண்மையில் வரலாற்றிலிருந்து மிகப் பெரிய பொக்கிஷங்கள் மறைந்து போகும் என்று உலக முன்னணி வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Louvre அருங்காட்சியகத்தில் இப்படி கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. 1911ஆம் ஆண்டு, Vincenzo Peruggia என்பவர், புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தைத் திருடிச் சென்றார். 1913ஆம் ஆண்டு, அவர் அதை இத்தாலியிலுள்ள ஃப்ளாரன்ஸ் என்னுமிடத்தில் விற்க முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
1971ஆம் ஆண்டு, Louvre அருங்காட்சியகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட The Wave என்னும் ஓவியம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 1922ஆம் ஆண்டு, புகழ் பெற்ற யூத செல்வந்தரான Rothschild குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கிய இரண்டு அரிய கலைப்பொருட்கள், 1983ஆம் ஆண்டு Louvre அருங்காட்சியகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டன.
40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு, Bordeaux நகரில் அவை மீட்கப்பட்டன. முன்னதாக, “லூபின்” என்ற பிரான்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு “ஜென்டில்மேன் திருடன்”, Louvre அருங்காட்சியகத்திலிருந்து அரச கிரீடத்தை கற்பனையாகக் கொள்ளையடிப்பதாகக் காட்டியது. அது இப்போது உண்மையில் அரங்கேறியுள்ளது.
















