ஸ்பெயினில் உணவக நாற்காலிகளைக் குறிவைத்து திருடிய வித்தியாசமான திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஸ்பெயினின் இயற்கை அழகை ரசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்குக் கிடைக்கும் பேலா, டப்பாஸ் , ஜாமோன் போன்ற பிராந்திய உணவுகளைச் சாப்பிட அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான வடிவமைப்பில் பல்வேறு உணவகங்கள் இயங்கி வருகின்றன.
அதில் உணவகத்துக்கு வெளியேயே நாற்காலிகளை போட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு பரிமாறும் முறையும் அடங்கும்.
இதனிடையே கடந்த 2 மாதங்களாகவே மாட்ரிட் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேரத்தில் உணவகத்தின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மாயமாவது தொடர் கதையாகி வந்தது.
விலை உயர்ந்த பொருட்களை திருடிச் செல்வோருக்கு மத்தியில் நாற்காலிகளை குறிவைக்கும் கும்பல் குறித்த வழக்கு போலீசாருக்கு தலைவலியாக மாறியது.
இந்நிலையில் நாற்காலிகளை குறிவைத்து திருடிய 7 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாய்க்கு உணவக நாற்காலிகளை திருடியது தெரியவந்து பலரையும் வியக்கச் செய்துள்ளது.
















