தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அறிவிப்பு வரும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பு வந்தவுடன் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணியைத் தேர்தல் அதிகாரிகள் தொடங்குவார்கள் என்றும், பொதுமக்கள் பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே வாங்கி ஒப்படைப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்க ஒரு மாதம்வரை கால அவகாசம் வழங்கப்படும் என்றும், 90 ஆயிரம் அலுவலர்கள் உட்பட தேர்தல் உயர் அதிகாரிகளும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பீகாரில் நடைபெற்ற திருத்தப் பணிகளுக்கும், தமிழகத்தில் நடைபெறவுள்ள பணிகளுக்கும் சில மாற்றங்கள் இருக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















