மும்பைக்கு செல்ல வேண்டுமென்றால் முதலில் மராத்தி பேச வேண்டும் என ஏர் இந்தியா விமானத்தில் சக பயணியைப் பெண் ஒருவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவிலிருந்து மும்பை சென்ற விமானத்தில் மாஹி கான் என்பவர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவர், மாஹி கானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்தப் பெண் பயணி, மாஹி கானிடம், “நீங்கள் மும்பைக்குச் செல்கிறீர்கள் என்றால், உங்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார்.
இதற்கு மாஹி கான், மராத்தி பேசமாட்டேன் என்று பதிலளித்தபோது, ஆத்திரமடைந்த அந்தப் பெண், மும்பையில் இறங்குங்கள், நான் யாரென்று காட்டுகிறேன் என்று விமானப் பணியாளர்கள் முன்னிலையில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
















