உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி வெளிநாட்டினர் இருவர் நடனமாடும் வீடியோ வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் காதல் சின்னமாகக் கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹால், உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
முகலாய மன்னன் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டிய இந்தக் காவிய படைப்பு, அதன் அழகால் ஆண்டுதோறும் பல மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
இங்கு நடனம், யோகா உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடையை மீறி வெளிநாட்டினர் இருவர், தாஜ்மஹாலில் நடனமாடிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அந்த வீடியோவில், வெளிநாட்டு பயணிகள் ராயல் கேட் அருகே உள்ள சிவப்பு மேடையில் நடனமாடுவதும், அதனைச் சுற்றுலா வழிகாட்டி வீடியோவாகப் பதிவு செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பவ இடத்திலிருந்த சிஐஎஸ்எப் பாதுகாப்பு படையினர், சுற்றுலா வழிகாட்டியின் செல்போனில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளை அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
















