காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி அரசு மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சிக்கிறது. இது பலன் தருமா? எப்படி சாத்தியம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
வறட்சி, வெள்ளம், கடுமையான காற்று மாசுபாடு போன்ற முக்கிய பிரச்னைகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. டெல்லி போன்ற நகரங்களில் மூடுபனி காலங்களில் காற்று மாசு என்பது பொதுமக்களுக்கு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்திவிடுகிறது.
இது போன்ற சமயங்களில் செயற்கை மழையை உருவாக்குவதன் மூலம் காற்றில் மாசை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, சுத்தமான காற்றையும் அனுபவிக்க முடியும். எரிசக்தி கொள்கை நிறுவனத்தின் அறிக்கையின்படி, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுடன் ஒப்பிடும்போது, நகரத்தில் உள்ள காற்று மாசுபாடு குடிமக்களின் ஆயுட்காலத்தை சராசரியாக 11.9 ஆண்டுகள் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான மேக விதைப்பு நடைமுறையைக் கையில் எடுத்திருக்கிறது டெல்லி அரசு. பொதுவாகச் சிறிய நீர்த்துளிகள் அல்லது பனிபடிகங்களாக இருக்கும் மேகங்களிலிருந்து, செயற்கையாக மழையை உருவாக்கி, அதைப் பூமிக்கு கொண்டுவரும் வானிலை மாற்றத் தொழில்நுட்பத்தைத்தான் மேக விதைப்பு என்கிறார்கள்.
சிறியதாக உள்ள மேக துளிகள், சற்று பெரிதாக வளர்வதை ஊக்குவிக்கும் ரசாயன பொருட்கள், விமானங்கள் மூலம் காற்றில் தூவப்படும்போது, அது செயற்கை மழையை உருவாக்குகிறது… இந்த மேக விதைப்பு நடைமுறையைப் பூமியிலிருந்து ஜெனரேட்டர்கள் மூலமும், ராக்கெட் போன்றவற்றின் மூலமும் செயல்படுத்த முடியும் என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கூற்று.
இந்தியாவில், பொதுவாக விமானங்கள், ராக்கெட்டுகள் அல்லது ஜெனரேட்டர்கள் வாயிலான மேகங்களில் ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. டெல்லியில் மேக விதைப்பு சோதனைக்காக 90 நிமிடங்கள் விமானம் பயன்படுத்தப்பட்டது. மேக விதைப்பை மேற்கொள்ள, சில்வர் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, சாதாரண உப்பு, கால்சியம் குளோரைடு போன்ற ரசாயனங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. டெல்லியில் மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்குச் சில்வர் அயோடைடு அல்லது உப்பு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேக விதைப்புக்கான செலவு, இடம், செயல்பாட்டு முறை, திட்ட அளவீட்டைப் பொறுத்து மாறுபடும்… சிறிய அளவிலான மேக விதைப்பு திட்டங்களுக்கு 12.5 லட்சம் ரூபாய் முதல் 41 லட்சம் ரூபாய் வரை செலவாகலாம்… பெரிய அளவிலான திட்டங்கள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 12 கோடி ரூபாய் செலவாகும்.
அமெரிக்கா மேக விதைப்பு திட்டங்களுக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 352 கோடிவரை செலவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 2025ம் ஆண்டில் ஐந்து மேக விதைப்பு சோதனைகளுக்காக டெல்லி அரசு மூன்று கோடியே 21 லட்சம் ஒதுக்கீடு செய்திருக்கிறது.. தொடக்க நிலைக்காக உட்கட்டமைப்பு மற்றும் அமைவிடத்திற்காக 66 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும், ஒரு சோதனைக்காகச் செலவு 55 லட்சம் ரூபாய் ஒன்றரை கோடி வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு 5 முதல் 6 நாட்கள் வரை மேக விதைப்பு திட்டத்தைச் செயல்படுத்த, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1 லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேக விதைப்பு, வறட்சியான காலகட்டங்களில் தேவையான மழைப்பொழிவை ஏற்படுத்தி, பயிர்களைக் காப்பாற்றுகிறது. காற்று மாசுபாட்டை குறைத்து சுத்தமான காற்றை வழங்குகிறது. மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் நீரை நிரப்பப் பயன்படுகிறது.
மேக விதைப்பு நடைமுறைகள் பொதுவாகப் பாதுகாப்பானதுதான் என்றாலும், சில அபாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதிகமான ரசாயனங்கள், நீர்வாழ் உயிரினங்களுக்கோ, மண்ணிற்கோ நஞ்சாக மாறும் வாய்ப்பு உள்ளது.
எனினும் சரியான அளவீட்டில், குறைந்த அளவு ரசாயனங்களை பயன்படுத்தும்போது, மேக விதைப்பு 10 முதல் 30 சதவிகிதம் வரை பலன் தருகிறது. இந்தச் செயல்முறை ஒரு உறுதியான தீர்வாக இல்லை, ஆனால் இது காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாட்டிற்கு எதிராக ஒரு நல்ல நம்பிக்கையை அளிக்கிறது. ஐஐடி கான்பூர் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
















