கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் பெய்யும் கனமழையால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 44 புள்ளி 51 அடியை எட்டியதை தொடர்ந்து, அணையில் இருந்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
















