உலக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மந்தமாக இருக்கும் என்ற கணிப்புகளுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6 புள்ளி 6 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் அறிக்கையின்படி, அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில், இந்தியா தொடர்ந்து முதன்மை வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் வலுவான பொருளாதார செயல்திறன் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 புள்ளி 6 சதவிதமாக அதிகரித்துள்ளதாகவும், இது 4 புள்ளி 8 சதவீதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படும் சீனாவை விட வேகமாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
நடப்பாண்டில் உலகளாவிய வளர்ச்சி 3 புள்ளி 2 சதவீதம் என கணித்த சர்வதேச நாணய நிதியம், அடுத்த ஆண்டில் இது 3 புள்ளி ஒன்று சதவீதமாக குறையும் என்றும் எதிர்பார்க்கிறது.
அமெரிக்காவின் வரி நடவடிக்கையால் நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், நாட்டின் வலுவான உள்நாட்டு நுகர்வுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்தியா 6 புள்ளி 3 முதல், 6 புள்ளி 8 சதவீதம் வரை பராமரித்து வருகிறது.
















