அமெரிக்க பாலியல் வழக்கு தொடர்ந்த வர்ஜீனியா கியூஃப்ரே மீண்டும் தலைப்புச் செய்திகளில் இதன் பெற்றுள்ளார். தனது சுயசரிதையில், ‘பிரபலமான பிரதமர்’ ஒருவரால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பதிவு செய்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு சர்வதேச அரசியலையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மோசமான பாலியல் கடத்தல் நெட்ஒர்க்கில் இருந்து தப்பியவர்களில் ஒருவர் தான் வர்ஜீனியா கியூஃப்ரே.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும் வர்ஜீனியா குற்றம் சாட்டியிருந்தார். 2008ஆம் ஆண்டு தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019 ஆம் ஆண்டு, ஜெஃப்ரி எப்ஸ்டீன் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
எப்ஸ்டீனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்காக இளம்பெண்களைச் சேர்த்து வைத்த குற்றத்துக்காக 2021ம் ஆண்டில் முன்னாள் பிரிட்டிஷ் சமூக ஆர்வலரான மேக்ஸ்வெல்லும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அதே ஆண்டு, பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும், 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாகவும் வர்ஜீனியா வழக்கு தொடர்ந்திருந்தார்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தனது அரச பட்டங்களை துறப்பதாக பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், வர்ஜீனியா தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, “Nobody’s Girl: A Memoir of Surviving Abuse and …” என்ற பெயரில் வர்ஜீனியா கியூஃப்ரேயின் சுயசரிதை, வெளிவந்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் பாலியல் அடிமையாக தனக்கு ஏற்பட்ட கொடூரமான துன்பங்களையும் போராட்டங்களையும், சுயசரிதையாக அவர் எழுதியுள்ளார். அந்த நூலில் தான்,வர்ஜீனியா கியூஃப்ரே,16 வயது தொடங்கி தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்பங்களையும் பயங்கரமான அனுபவங்களையும் பிராமண பத்திரம் போல விவரித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ லண்டன், நியூயார்க் மற்றும் எப்ஸ்டீன் தீவில் தன்னை மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தான் ஒரு மைனர் என்பதை இளவரசர் அறிந்திருந்ததாகவும் வர்ஜீனியா குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, ஜெஃப்ரி எப்ஸ்டீன் கரீபியன் கடலில் உள்ள தனியார் தீவில் ஒரு பிரதமருக்கு தன்னை பாலியல் அடிமையாக அளித்தார் என்று கூறியுள்ள வர்ஜீனியா, அந்தப் பிரதமரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் பின்னர் நீதிமன்றத்தில் அவரை முன்னாள் இஸ்ரேல் பிரதமர் எஹுட் பராக் (Ehud Barak) என்று அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.
பெயர் குறிப்பிடப்படாத பிரதமரால் தான் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், தான் “பாலியல் அடிமையாக இறந்துவிடக்கூடும் என்று அஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார். தன்னை மீண்டும் அவரிடம் அனுப்ப வேண்டாம் என்று கண்ணீருடன் எப்ஸ்டீனிடம் மண்டியிட்டு கெஞ்சியதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனது நூலில், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு தனது உயிருக்கு கெஞ்ச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ள வர்ஜீனியா இந்த சம்பவத்தை தனது வாழ்க்கையின் மிகக் கொடூரமான இரவு என விவரித்துள்ளார்.
உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனதளவிலும் அதிக தாக்கங்களை எதிர்கொண்டதாகவும், துன்பப்படுவதையும், உயிருக்கு கெஞ்சுவதையும் பார்த்து முன்னாள் பிரதமர் மகிழ்ச்சியடைந்தார் என்றும் வர்ஜீனியா எழுதியுள்ளார்.
இந்த அனுபவம் தான் வாழ்க்கையின் மாறுபட்ட திருப்புமுனையாக அமைந்தது என்றும், இதுவே எப்ஸ்டீனின் பாலியல் நெட்ஒர்க்கில் இருந்து விடுபட்டு, நீதிக்காகப் போராடும் தைரியத்தைத் தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தனது சுயசரிதையில், எப்ஸ்டீனின் நெட்ஒர்க்குடன் தொடர்புடைய மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் பெயர்களை தன்னால் வெளியிட முடியவில்லை என்று வெளிப்படுத்தியுள்ள வர்ஜீனியா, அந்த பெரிய மனிதர்கள் தன்னை மௌனமாக்க பல வழிகளில் வற்புறுத்தியதாகவும் அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
2000ம் ஆண்டில், புளோரிடாவில் உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மார்-எ-லாகோ கிளப்பில் ஸ்பா உதவியாளராக மேக்ஸ்வெல் தன்னை பணியில் அமர்த்திய போது தனக்கு 16 வயது என்று கூறியுள்ள வர்ஜீனியா, எப்ஸ்டீனின் கீழ் தனது பாலியல் அடிமைத்தனத்தின் தொடக்கம் அதுதான் என்று கூறியுள்ளார்
400 பக்கங்களைக் கொண்ட சுயசரிதையில், வர்ஜீனியா, தனது துன்ப அனுபவங்களை மட்டும் விவரிக்கவில்லை. சுக்கு நூறாக உடைந்த மனதிலிருந்து எப்படி நீதிக்கான பாதையை நோக்கி எழுந்தார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பெரும் செல்வந்தர்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமிகள் இளம்பெண்களுக்கான நீதி போராட்டத்தின் ஒரு சின்னமாக மாறிய வர்ஜீனியா, இப்போது நம்மிடத்தில் இல்லை.
ஆனால், அவரது சுயசரிதை இன்று நீதிக்காக போராடும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக உள்ளது.
எத்தனை முறை உண்மை ஒடுக்கப்பட்டாலும், ஒருநாள் வெளிவரும் என்பது தான் வர்ஜீனியாவின் சுய சரிதை சொல்லும் செய்தி. எப்ஸ்டீன் நெட்வொர்க்கின் இருண்ட உண்மையை அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல், பயத்தை விட தைரியம் ஒரு பெரிய சக்தி என்பதை எடுத்துக் காட்டுகிறது.
















