இடுக்கி அருகே அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர் மழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
லட்சுமண் வீடு காலனியில் இருந்து 22 குடும்பங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், பிஜூ என்பவர் மனைவி சந்தியாயுடன் வீட்டில் இருந்து சில பொருட்களை எடுப்பதற்காக. லட்சுமண் வீடு காலனிக்கு சென்றுள்ளனர். அப்போது, திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, 50 அடி உயர மலையின் ஒருபகுதி குடியிருப்புகள் மீது விழுந்துள்ளது.
இதில், லட்சுமண் வீடு காலனியில் இருந்த அனைத்து வீடுகளும் சேதமடைந்த நிலையில், பொருட்களை எடுப்பதற்காக சென்ற பிஜூவும் அவரது மனைவி சந்தியாவும் நிலச்சரிவில் சிக்கினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பொதுமக்களின் உதவியுடன் 7 மணி நேரமாக போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த தம்பதியை மீட்டனர். இதில், பிஜூ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சந்தியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
















