விளம்பர உலகின் ஜாம்பவானான பியூஷ் பாண்டேவின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் முதல் உச்சபட்ச நடிகர்கள்வரை அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பியூஷ் பாண்டே குறித்தும், அவர் இயக்கிய விளம்பரங்கள் குறித்தும் இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த உரையில் இடம்பெற்ற ஆப் கி பார் மோடி சர்கார் என்ற பிரபல வாசகத்திற்கு சொந்தக்காரர், விளம்பர உலகின் ஜாம்பவனான பியூஷ் பாண்டே. 2014 மக்களவை தேர்தலின்போது இவர் உருவாக்கிய இந்த வாசகம் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்தது.
இதேபோல, பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமான ஹட்ச் டாக் (Hatch Dog) விளம்பரத்தைத் தயாரித்ததும் பியூஷ் பாண்டேதான். சிறுவன் ஒருவனை நாய்க்குட்டி எப்படி நிழல் போலப் பின்தொடர்ந்தபடியோ உள்ளதோ, அதேபோல ஹட்ச் நெட்வொர்க்கும் வாடிக்கையாளர்களைப் பின்தொடரும் எனக் கூறும் வகையில் கவித்துவமாக அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தின் மூலம் ஹட்ச்-க்கு இணையாக அந்த நாய் வகையும் பிரபலம் அடைந்தது. அந்த நாயின் உண்மையான பெயர் pug-ஆக இருந்தாலும், இன்றுவரை அந்த நாய் பலராலும் hutch dog என்றுதான் அழைக்கப்படுகிறது. இப்படி, மறக்க முடியாத பல விளம்பரங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டேயின் விளம்பர தயாரிப்புப் பயணம் 1982ம் ஆண்டு ஆரம்பமானது.
Ogilvy & Mather India என்ற விளம்பர நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அவர் குறுகிய காலத்திலேயே தனது படைப்புகள்மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார். Cadbury Dairy, Asian Paints, Fevikwik, Fevicol போன்ற நிறுவனங்களுக்கு அவரும், அவரது நிறுவனமும் தயாரித்து தந்த விளம்பரங்கள் இன்றுவரை பிரபலமாக உள்ளன.
அவற்றில் வோடோஃபோனின் ZooZoos விளம்பரம் குறிப்பிடத்தக்கது. அதேபோல, வாஹாஎல்லையைப் பின்னணியாகக கொண்டு அவர் உருவாக்கிய Fevikwik விளம்பரமும் அனைவராலும் ரசிக்கப்பட்டது. பியூஷ் பாண்டேவின்திறமையைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதுவழங்கிக் கௌரவப்படுத்தியுள்ளது.
70 வயதான அவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மும்பையில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்தனர்.
பியூஷ் பாண்டேவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக fevicol நிறுவனம், செய்தித்தாள்களில் அரைப்பக்கத்திற்கு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், எந்த வாசகமும் இல்லை. வெறுமனே, பியூஸ் பாண்டேவின் மீசையும், அவரது பெயரும்தான் உள்ளது. பியூஸ் பாண்டேவுக்கான கச்சிதமான இரங்கலாக அது கருதப்படுகிறது.
ஏனென்றால், அவரது விளம்பரங்களில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எதுவும்பேசமாட்டார்கள். ஆனால், அந்த விளம்பரங்கள் அனைவராலும் பேசப்படும். இனி அந்த விளம்பரங்களோடு சேர்த்து, பியூஸ் பாண்டேவும் பேசப்படுவார்.
















