புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுவரும் 77 வயதான இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சொந்த இறுதிச் சடங்குக்கான திட்டத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே அங்கீகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு மன்னர் இறக்கும்போது என்ன நடக்கும் ? இந்தக் கேள்வி புதியதல்ல. ஒவ்வொரு மன்னருக்கும் அவர் அரியணை ஏறியவுடனேயே இந்தக் கேள்வி வந்துவிடும். இறையாண்மையைக் காப்பதற்கும் புதிய மன்னரை அல்லது ராணியை தேர்ந்தெடுத்து முடிசூட்டவும், அரச வாரிசு வரிசையை மாற்றவும், முடியாட்சியை தொடர்ந்து நடத்தவும் குறிப்பிட்ட நிகழ்வுகள் மற்றும் மரபுகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பிரிட்டன் மன்னராக முடிசூட்டப்பட்டபோது ,மூன்றாம் சார்லஸுக்கும் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். தனது இறுதிச் சடங்கான ஏற்பாடுகள் சார்லஸ் ராஜாவான தருணத்திலிருந்து தொடங்கி விட்டன. பல ஆண்டு காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் மரண சடங்கு நடைமுறைகள் ஏற்கெனவே 2022-ல் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்தபோது “Operation London Bridge” என்ற பெயரில் அமைக்கப் பட்டன.
தனது சொந்த மரணத் திட்டத்தில் தனிப்பட்ட முறையில் சில மாற்றங்களைச் செய்த மன்னர் சார்லஸ் அந்தத் திட்டத்தை அங்கீகரித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இதற்கு Operation Menai Bridge” என்ற குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் உதவியாளர்கள், “Operation Menai Bridge” எனப்படும் இறுதிச் சடங்குகளை விவரிக்கும் அவரது அதிகாரப்பூர்வ பணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே பல நூறு பக்கங்கள் கொண்ட ஆவணம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அவரது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மன்னர் சார்லஸ் இறுதி சடங்கு, அதற்கேற்ப திட்டமிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவின்போது 18 நாட்கள் துக்கம் அனுசரித்த நிலையில், தனக்கான துக்க அனுசரிப்பு, மரண அறிவிப்பு முதல் இறுதிச் சடங்குவரை சுமார் 10 அல்லது 11 நாட்கள் வரை நீடித்தால் போதும் என மன்னர் சார்லஸ் கூறியுள்ளதாகத் தெரியவருகிறது.
மன்னர் சார்லஸ் எங்கு இறக்கிறார் என்பதைப் பொறுத்து, குடும்ப உறுப்பினர்களால் அவரது உடல் ரகசியமாகப் பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும், துக்க நாட்களில் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகிய முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதில் சார்லஸ் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தனது இளைய மகன் குடும்பத்தின் இதயத்தில் சரியான இடத்தைப் பெற வேண்டும் என்பதில் மன்னர் உறுதியாக இருப்பதால், விரிசலான உறவுகள் இருந்த போதிலும், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே துக்க நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என்று மன்னர் சார்ல்ஸ் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குடும்ப உறவுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்றங்களைத் தணிப்பதற்கான இறுதி வாய்ப்பாக இருக்கலாம் என்று மன்னர் நினைப்பதாகக் கூறப்படுகிறது. மன்னர் சார்லஸ் அங்கீகரித்துள்ள இறுதி சடங்கு திட்டத்தில், மத்திய லண்டனில் நடக்கும் இறுதி ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கும் ஹாரி, தனது சகோதரர் வில்லியமுடன் அருகருகே நடந்து செல்வார் என்றும், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நடைபெறும் குடும்ப நிகழ்வில் மேகனும் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர்களின் குழந்தைகள், ஆர்ச்சி மற்றும் லிலிபெட், விண்ட்சரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மன்னரின் இறுதிச் சடங்கின் இப்படி திட்டமிடப்பட்டிருந்தாலும், தொடர்ந்து இதுகுறித்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதில், ஹாரி மற்றும் மேகனின் பங்கேற்பு பற்றித் தான் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறிய ஹாரி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட போதும், விழா முடிந்ததும் உடனடியாகப் பிரிட்டனை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.
மன்னர் இறந்த மறுநாள், தேவையான அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திடப் பட்டு, சத்தியப்பிரமாணம் செய்து, வில்லியம் புதிய மன்னராக அறிவிக்கப்படுவார்.பின்னர் செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையின் பால்கனியில் புதிய மன்னராக முதல் முறையாகப் பொதுமக்களிடம் ஐந்தாம் வில்லியம் உரையாற்றுவார்.
தற்போதைய வேல்ஸ் இளவரசி கேட், வில்லியமை மணந்ததால், தானாகவே ராணியாக மாறுவார். தனது தாயார் இறந்ததைத் தொடர்ந்து தனது முதல் உரையில் மன்னர் சார்லஸ், வேல்ஸ் இளவரசர் பட்டத்தை வில்லியமுக்கும் வேல்ஸ் இளவரசி பட்டத்தைக் கேட்டிற்கும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
















