கூடலூர் அருகே கடந்த மாதம் பிடிப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை அப்பர் கோதையாறு வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் 12 பேரை தாக்கிக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற ஆண் காட்டு யானையைக் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
முதுமலை புலிகள் காப்பகம், அபயாரணயம் யானைகள் முகாமில் உள்ள மரக்கூண்டில் யானையை அடைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மரக்கூண்டில் இருந்த காட்டு யானையை நள்ளிரவு கும்கி யானைகள் உதவியுடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர், லாரியில் ஏற்றி, வனத்தில் விடுவதற்காகக் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதனை அடுத்து நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிக்கு அடுத்துள்ள அப்பர் கோதையாறு அடர் வனப் பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் முன்னிலையில் ராதாகிருஷ்ணன் யானையை, மருத்துவக் குழுவினர் விடுவித்தனர்.
ஏற்கனவே, கூடலூரில் பிடிக்கப்பட்ட புல்லட் ராஜா யானை மற்றும் தேனி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் ஆகிய 2 காட்டு யானைகள் அப்பர் கோதையாறு வனப் பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















