நெல் கொள்முதல் ஈரப்பத அளவை நிர்ணயம் செய்வது தொடர்பாக திருச்சியில் மத்திய நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென மத்திய அரசுக்குத் தமிழக அரசுக் கோரிக்கை விடுத்தது. அதன்படி தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பியுள்ளது.
அக்குழுவினர் தொடர்ச்சியாகப் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, திருச்சியில் உள்ள வாளாடி, வேலாயுதபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குழு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.
அப்போது நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்துகொண்ட குழுவினர் நெல்லின் தன்மை, அதன் ரகங்கள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் நெல்மாதிரிகளை சேகரித்து அதனை இயந்திரத்தில் வைத்துப் பரிசோதனை மேற்கொண்டனர்.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களிலும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். செம்பேடு, தாராட்சி, நத்தம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த அவர்கள், நெல் மாதிரிகளை சேகரித்தனர்.
அப்போது விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் சேதமடைந்த நெல்மணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அதேபோல தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராராமுத்திரக்கோட்டையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த நெல்களை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள், நெல்லுக்கான ஈரப்பதம் தளர்வை மாநில அரசே முடிவு செய்து கொள்ளும் அதிகாரத்தை, மத்திய அரசு வழங்க வேண்டும் என மத்திய குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
















