உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் தவறான திசையில் பயணிக்கும் வாகனங்களை தடுக்கும் வகையில் டயர் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.
கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் இங்கு வந்து கங்கையில் புனித நீராடி இறைவனை தரிசித்து சென்றால் பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறுவர் என்பது ஐதீகம்.
இதன் காரணமாக நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாரணாசிக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு வருவோரின் வாகனங்கள் தவறான திசையில் பயணித்து விபத்துக்களை உண்டாக்குவதும் தொடர்கதையாகி வந்தது.
இந்நிலையில் வாரணாசியில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், மேம்பாலங்களின் மேலே தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மேம்பாலம் ஒன்றில் அமைக்கப்பட்ட டயர் தடுப்பாணையும் மீறி முதியவர் ஒருவர் தவறான திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதனைக் கண்ட போலீசார், அவரை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கித் திருப்பி அனுப்பினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
















