சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடை உரிமையாளரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி பொன்நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர், அரியக்குடியில் உள்ள தனக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விட்டிருந்தார். இவர் மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழனியப்பனுக்கும், அவரது கடையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த சாந்தகுமார் என்பவருக்கும் கடையை காலி செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலி ஆவணம் தயாரித்த வழக்கில் சாந்தகுமார் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தனக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற கட்டட பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்த பழனியப்பனை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது.
சிறைக்கு செல்ல காரணமாக இருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சாந்தகுமார் உள்ளிட்டோர் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
















