மத்திய அரசின் ஞான பாரதம் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நம் நாட்டில், பல நுாற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் மற்றும் காகித சுவடிகளை பாதுகாப்பது சவால் நிறைந்ததாக உள்ளதால், அவற்றை டிஜிட்டல் ஆவணமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் அவற்றை டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றி, சர்வரில் பாதுகாப்பது மற்றும் உலகில் உள்ள அனைவரும் அணுகும் வகையில் பரவலாக்குவது போன்றவற்றுக்காக ஞான பாரதம் என்ற திட்டத்தை மத்திய கலாச்சார துறை அறிவித்துள்ளது.
இதற்காக 20 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள மத்திய அரசு, மேலும் 10 நிறுவனங்களை இப்பணியில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னையில் உள்ள கீழ்திசை சுவடிகள் நுாலகம், கொல்கத்தாவின் ஏசியடிக் சொசைட்டி, ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலை, பிரயாக்ராஜில் உள்ள ஹிந்தி சாகித்ய சம்மேளனம் போன்றவற்றின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.
















