பெங்களூருவில் பகல் நேரத்தில் லேப்டாப்பை இயக்கும் கைகள், இரவில் ஸ்டீயரிங் வீலை பிடிக்க தொடங்கியுள்ளன. அங்கு வாழும் இளம் டெக் நிபுணர்கள் தங்கள் தனிமையையும், மன அழுத்தத்தையும் போக்க, OLA, UBER போன்ற CAB-களை ஓட்டி மக்களோடு உரையாடும் புதிய வழக்கத்தை உருவாக்கியுள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூருவில் அண்மை காலமாக ஒரு வித்தியாசமான கலாசாரம் உருவாகி வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பல இளம் பொறியாளர்கள், பகலில் தங்கள் மென்பொருள் நிறுவனங்களிலும், இரவில் வாடகை கார் ஓட்டுநர்களாகவும் பணியாற்றுவதை வாடிக்கையாக மாற்றியுள்ளனர்.
இது கூடுதல் வருமானத்திற்காக மட்டுமல்ல, தங்கள் தனிமை மற்றும் மன அழுத்தத்தை போக்க, புதிய மனிதர்களுடன் பழக வேண்டும் என்ற மனநிலையிலிருந்து தோன்றிய ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போக்கு, வேலை மற்றும் வாழ்க்கை இடையேயான சமநிலையின்மையை வெளிப்படுத்தும் ஒரு சமூக பிரதிபலிப்பாக மாறியுள்ளது.
விஜயவாடாவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் மென்பொருள் நிறுவன ஊழியராக பணிக்குச் சேர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின், தனது தனிமையையும், பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தையும் போக்க வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்தார்.
‘நம்ம யாத்ரி’ ஆப் மூலம் தன்னை ஓட்டுநராக பதிவு செய்துகொண்ட அவர், வாரத்திற்கு இருமுறை இரவு நேர கேப் ஓட்டுநராக பணியாற்ற தொடங்கினார். ஆனால், தற்போது அவர் மட்டுமல்ல OLA, UBER, RAPIDO போன்ற ஆப்கள் மூலம், பல ஐடி ஊழியர்களும் இரவு நேர ஓட்டுநர்களாக பணியாற்ற தொடங்கியுள்ளது குறித்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட தொடங்கியுள்ளனர்.
சிலர் புதிய மனிதர்களை சந்திக்கவும், அடையாளத்தை மறைத்து சுதந்திரமாக பழகவும் இந்த வழியை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. பெங்களூரு மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே போக்கு அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவில் விமான நிலையத்திற்கு செல்ல OLA கார் புக் செய்தபோது, அதன் ஓட்டுநர் சரளமாக ஆங்கிலத்தில் பேசியதாகவும், அவரை பற்றி விசாரித்தபோது அவர் மென்பொறியாளர் என்பது தெரியவந்ததாகவும் பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் MICROSOFT நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், வார இறுதியில் ஆட்டோ ஓட்டுவதாக வெளியான செய்தி சமூக வலைதள பயனர்களின் கவனத்தை பெற்றது. அப்போது அதனை மனநல பிரச்னைகளின் பிரதிபலிப்பாகக் கருதுவதாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
மற்றொருபுறம், சம்பளங்கள் வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ப உயரவில்லை என்பதால், இதுபோன்ற பகுதிநேர பணியின் வருமானங்கள் இளம் பொறியாளர்களுக்கு மிக அவசியம் என மென்பொருள்துறை சார்ந்த மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மென்பொறியாளர்கள் யாரும் சங்கங்களில் பதிவு செய்வதில்லை என கூறும் OLA – UBER ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள், அவர்கள் நல்ல சேவையை வழங்கும் பட்சத்தில் அதனை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ மென்பொறியாளர்கள் கேப் ஓட்டுநர்களாக மாறுவது ஒருபுறம் சுதந்திரத்தை தேடும் மனநிலையை பிரதிபலித்தாலும், மற்றொருபுறம் அது வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை இழந்த நவீன கார்ப்பரேட் கலாச்சாரத்தின் கண்ணாடியாகவும் திகழ்கிறது.
















