இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நீதித்துறையில் விரைவாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர் நிக்கோலஸ் டெக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தரவுகளில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இது பற்றி சற்று விரிவாக காணலாம் இந்த செய்தி தொகுப்பில்…
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் நிக்கோலஸ் டெக்கர், இந்திய நீதித்துறையின் மந்தநிலைதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் பெரிய “தடைக்கல்” என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
டெக்கர் வெளியிட்ட தரவுகளின்படி, இந்திய நீதிமன்றங்களில் தற்போது 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நாடு முழுவதும் 5 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உச்சநீதிமன்றத்தில் 88 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் சுமார் 18 ஆயிரம் வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் டெக்கர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் கணக்கீட்டுப்படி தற்போதைய வேகத்தில் இந்த நிலுவை வழக்குகளை முடிக்க 324 ஆண்டுகள் ஆகும் என நிக்கோலஸ் டெக்கர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கு 21 நீதிபதிகள் மட்டுமே இருப்பதாக கூறும் அவர், இந்த புள்ளி விவரம் அமெரிக்காவில் 150 ஆகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 200 ஆகவும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தாமதமாக வழங்கப்படும் நீதி வணிக ஒப்பந்தங்கள், தொழில் விரிவாக்கங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிக்கோலஸ் டெக்கர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆய்வின்படி நீதித்துறை திறனை மேம்படுத்துவது மட்டுமே இந்தியாவின் உற்பத்தித் திறனை 4 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறும் டெக்கர், தாமதிக்கப்படும் நீதி, தொழிலாளர் சந்தையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். 1983-ல் தொடங்கி 2005-ல் முடிவடைந்த BHARAT FORGE Vs UTTAM MANOHAR NAKATE வழக்கை இதற்கு நேரடி சான்றாக குறிப்பிடும் டெக்கர், இதுபோன்ற வழக்குகளால்தான் புதிய பணியாளர்களை நியமிக்கவே நிறுவனங்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய நீதித்துறையின் செயல்திறன் குறைவால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு 10 சதவீதம் வரை இழப்பு ஏற்படுவதாக கூறும் டெக்கர், அதே சமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.1 சதவீதம் மட்டுமே இந்திய நீதித்துறைக்கு செலவிடப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் மாவட்ட நீதிமன்றங்களை விரிவுபடுத்தி, நீதிபதி நியமனங்களை வேகப்படுத்தி, தேவையற்ற தாமதங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பதே சரியான தீர்வாக இருக்கும் என பரிந்துரைக்கும் நிக்கோலஸ் டெக்கர், இந்தியாவுக்கு நீதித்துறை சீர்திருத்தம் என்பது வெறும் அரசியல் வாசகம் அல்ல; ஒரு பொருளாதார அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
















