மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா, 2025-ம் நிதியாண்டில் 96.5 மில்லியன் டாலரை சம்பளமாக பெற்றுள்ளார். அந்நிறுவனத்தில் AI சார்ந்த வளர்ச்சியும், வருவாய் மற்றும் லாபத்தில் ஏற்பட்ட அபார உயர்வும், இந்த வரலாற்று சம்பள உயர்வை அவருக்கு பெற்றுக்கொடுத்ததாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்ய நாதெல்லா கடந்த 2014-ம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய உயரங்களை தொட்டது.
பாரம்பரிய மென்பொருள் நிறுவனமாக தொடங்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சத்ய நாதெல்லாவின் முயற்சியால் கிளவுட் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி சக்தியாக மாறியது.
நாதெல்லாவின் மூலோபாய சிந்தனை நிறுவனத்தின் வருவாயையும், பங்கு மதிப்பையும் பலமடங்காக உயர்த்தின. புதுமை, மனிதநேயம் மற்றும் நீண்டகால வளர்ச்சியை ஒருங்கிணைத்த அவரது பணி மேலாண்மை, உலக தொழில்நுட்ப துறைக்கே ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 2025-ம் நிதியாண்டு சத்ய நாதெல்லாவின் சம்பளத்தை 96.5 மில்லியன் அமெரிக்க டாலராக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகமாகவும், 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது முதல் அவர் பெற்ற மிகப்பெரிய சம்பள தொகையாகவும் பார்க்கப்படுகிறது.
நாதெல்லாவின் மொத்த சம்பள தொகையில் 2.5 மில்லியன் டாலர் அடிப்படை ஊதியமாகவும், 84 மில்லியன் டாலர் பங்குகளாகவும், 9.5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகைகள் மற்றும் கூடுதல் நன்மைகளாகவும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவரது ஊதியத்தின் 95 சதவீதத்துக்கும் மேல் நிறுவனத்தின் செயல்திறன் சார்ந்ததாக அமைந்துள்ளது.
நாதெல்லாவின் தலைமையையும், அவரது நீண்டகால வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் பொருட்டு, இத்தகைய சம்பள அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் இயக்குநர்கள் குழு தெரிவித்துள்ளது.
2014-ல் ஸ்டீவ் பால்மரை தொடர்ந்து தலைமை பொறுப்பு ஏற்ற நாதெல்லா, அப்போது மந்தமாக செயல்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை, தற்போது உலகின் மிக மதிப்புமிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக மாற்றியுள்ளார். அவரது தலைமையில் மைக்ரோசாஃப்ட் நிறுவன வருவாய் 3 மடங்காக உயர்ந்து, 281.7 பில்லியன் டாலராகவும், நிகர லாபம் 4 மடங்காக உயர்ந்து 101.8 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. அதேபோல, நிறுவன பங்குதாரர்களுக்கான மொத்த வருமானமும் 1000 சதவீதத்தை கடந்துள்ளது.
நாதெல்லாவின் தலைமையை, “தலைமுறை மாற்றிய தொழில்நுட்ப காலத்தின் முக்கிய திருப்பமாக” மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வர்ணித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலை இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 4 டிரில்லியன் டாலரை நெருங்கி, உலகளவில் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இந்த அபார வளர்ச்சியின் மையத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு இன்றியமையாதது. 2022-ம் ஆண்டு OpenAI நிறுவனத்தின் ChatGPT வெளியிடப்பட்ட பின், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது அனைத்து தயாரிப்புகளிலும் AI திறன்களை ஒருங்கிணைத்து, உலக AI துறையின் முன்னணியாளரானது. அந்நிறுவனத்தின் AZURE CLOUD தளம் கடந்த ஆண்டு, 75 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதுடன், மொத்த மைக்ரோசாஃப்ட் CLOUD பிரிவும் 168.9 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி 23 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது, 70 CLOUD மண்டலங்களிலும், 400-க்கும் மேற்பட்ட தரவு மையங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்நிறுவனம் உலகளவில் 1.2 பில்லியன் LINKED-IN உறுப்பினர்கள், 430 மில்லியன் வணிக பயனர்கள் மற்றும் 89 மில்லியன் தனிநபர் M-365 சந்தாதாரர்களையும் பெற்றுள்ளது.
NVIDIA நிறுவனத்தின் CEO ஜென்சன் ஹுவாங் ஆண்டு வருமானமாக 49.9 மில்லியன் டாலர் சம்பளமாக பெறுகிறார். அதேபோல, ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கும் 74.6 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார். இவற்றை ஒப்பிடுகையில் நாதெல்லாவின் சம்பளம் மற்ற தொழில்நுட்ப தலைவர்களை விட மிக அதிகமாக பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நடுத்தர ஊழியர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் டாலராக உள்ள நிலையில், தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பள விகிதம் அவர்களைவிட 480 மடங்கு அதிகம் என பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மற்றொருபுறம், 9 ஆயிரம் பணியாளர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்ததை சுட்டிக்காட்டி சிலர் நாதெல்லாவின் சம்பளத்தை விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், நிறுவனத்தின் நீண்டகால வெற்றியால் பங்குதாரர்களும், பணியாளர்களும் கட்டாயம் பயனடைவார்கள் என விளக்கமளித்துள்ளது.
















