உருவாக்கிய வேட்டைக்காரனையே வேட்டையாடத் தயாராகி விட்டனர் தாலிபான்கள். பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போர் என்று அறிவித்துள்ளதால் அந்நாடு மரணத்தின் விளிம்பில் உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு
அண்மையில் ஆப்கான்- பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர். பல எல்லைச் சாவடிகளைத் தாலிபான்கள் கைப்பற்றினர். பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி அசிம் முனீருக்குப் பேரிடியாக, பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத், பாகிஸ்தானை முழுமையாகக் கைப்பற்ற ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாதா உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் இன்னொரு வீடியோவில், ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மசூதிகளுக்குச் சென்று, பாகிஸ்தானை கைப்பற்ற கட்டளை வந்துள்ளது என்றும், என்ன விலை கொடுத்தாலும், அசிம் முனீரின் ராணுவத்தைத் தோற்கடிப்பது உறுதி என்று நூர் வாலி மெஹ்சுத் சவால் விடுகிறார்.
மற்றொரு வீடியோவில் பாகிஸ்தான் இராணுவ வாகனத்தை ஓட்டிச் செல்வதையும், அந்த வாகனத்தைத் தீவைத்துக் கொளுத்துவதையும் டிக் டாக் வீடியோவாக்கி பாகிஸ்தான் தலிபான் தளபதி நயீம் அல் குரேஷ் முஹாஜிர் வெளியிட்டுள்ளார். இது பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டை இழந்து வருகிறது என்பதன் அடையாளமாக உள்ளது.
இதே போல், முன்னாள் ஆளுநர் அபு யாசிர், பல தளபதிகளுடன் சேர்ந்து, பாகிஸ்தானுக்குள் இருந்து லைவ் வீடியோ மூலம் செய்திகளை வெளியிட்டு, பாகிஸ்தான் தாலிபானின் தலைமை ஆப்கானிஸ்தானில் உள்ளது என்ற பாகிஸ்தானின் குற்றசாட்டை நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தான் தாலிபானின் குர்ரம் வட்டத்தின் நிழல் ஆளுநரான காசிம் என்றும் அழைக்கப்படும் தளபதி மௌல்வி அகமது, அசிம் முனீருக்கு நேரடியாகவே சவால் விடுத்துள்ளார். உண்மையான வீரராக இருந்தால், போர்க்களத்துக்கு நேருக்கு நேருக்கு வா என்றும், கோழைத்தனமாக ஒழிந்து கொண்டு, செம்மறி ஆடுகளான பாகிஸ்தானின் இராணுவ வீரர்களை அனுப்பி அவர்களைச் மரணமடைய வைக்காதே என்று தனது வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் பக்துன்க்வா பழங்குடிப் பகுதிகளில் உள்ளூர்வாசிகளுடன் பாகிஸ்தான் தலிபான் தளபதிகள் வெகுஇயல்பாகப் பழகுவதைக் காட்டும் மற்றொரு அதிர்ச்சியூட்டும் வீடியோவும் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் சொந்த எல்லைக்குள் ஆழமாக கால் ஊன்றியுள்ள பாகிஸ்தான் தலிபான்கள், பெஷாவரில், மக்களின் ஆதரவுடன் பொது சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.
இந்தக் காட்சிகள் பாகிஸ்தானின் இராணுவம், சொந்த நாட்டின் நகரங்களின் மீதான முழு கட்டுப்பாட்டையும் இழந்து விட்டன என்பதையே காட்டுகின்றன. 1990களில் பாகிஸ்தானின் இஸ்லாமிய மதப் பள்ளிகளிலிருந்து உருவானதுதான் தலிபான்.
தொடர்ந்து, டிடிபி எனப்படும் பாகிஸ்தான் தலிபான், 2007-ல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான எதிர்ப்பை ஒன்றிணைக்க பல்வேறு போராளிக் குழுக்களின் கூட்டணியாக உருவாக்கப்பட்டது. ஆப்கான் தாலிபன் மற்றும் பாகிஸ்தான் தாலிபான் இரண்டுக்குமே மேற்குலகத்துக்கு எதிராகப் போராடுவது என்பது அடிப்படைவாத இஸ்லாமிய நம்பிக்கை அற்றவர்களுக்கு எதிரான ஒரு மதப் போராகவே கருதப்படுகிறது. பாகிஸ்தான் தாலிபான் அமைப்பும் பாகிஸ்தானில் ஷரியா அடிப்படையிலான அரசை உருவாக்கப் போராடுகிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தலிபான்கள் பயிற்சி முகாம்களின் மீது கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் வான் வழி தாக்குதல்களை நடத்தியது. இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப் பட்டனர். இங்கேதான் அசிம் முனீர் மிகப் பெரிய தவறை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் தாலிபான்கள் பஞ்சாபை நோக்கிப் படையெடுத்துள்ளனர். இஸ்லாமாபாத்தை கைப்பற்ற தலிபான் உச்ச தலைவர் உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். உண்மையிலேயே பாகிஸ்தான் அரசும் அசிம் முனீரும் மரணத்தின் விளிம்பில் உள்ளனர்.
இப்போது மொத்தமாகப் பாகிஸ்தான் தலிபான்கள் வசம் விழும் ஆபத்து அதிகமாகி உள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தலிபான்கள் கையில் போனால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே அணு ஆயுத ஏவுதளக் குறியீடுகள் உட்பட பாகிஸ்தானின் அணு ஆயுத களஞ்சியக் கட்டுப்பாடு முழுவதும் அமெரிக்கா தான் வைத்துள்ளது என்று CIA-வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்திருந்தார்.
தான் வளர்த்து விட்ட தாலிபான்களால் முற்றுகை இடப்பட்டுள்ளது பாகிஸ்தான். தலிபான்கள் பயங்கரவாதிகள் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்த அசிம் முனீருக்கு, அதுவே இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் ஒருபுறம், பாகிஸ்தான் தலிபான்கள் மறுபுறம், உள்ளூர் போராளிகள் இன்னொரு புறம், பலூச் விடுதலை இராணுவம் மற்றொரு புறம் என எல்லா திசைகளில் இருந்தும் பாகிஸ்தான் இராணுவத்துக்குத் தாக்குதல்கள் வருகின்றன. அணுசக்தி கூட வெளிநாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் பேரழிவின் விளிம்பில் உள்ளது.
















