டெல்லியில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள முகுந்த்பூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அசோக் விஹாரில் உள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவி கல்லூரிக்கு நடந்து சென்றபோது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ஆசிட் வீசியதாகப் புகாரளிக்கப்பட்டது.
மாணவி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கும்போது, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, தன்னை ஜித்தேந்தர் என்பவர் ஒருதலைப்படசமாகக் காதலித்ததாகவும், அவரிடம் சரிவரப் பேசாததால் ஆசிட் வீசியதாகவும் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் தந்தை அகிலிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது தான் தெரியவந்தது மொத்த சம்பவமும் நாடகம் என்று. கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட்டை, தனது மகளே எடுத்துச் சென்று, கையில் ஊற்றிக்கொண்டு நாடகமாடினார் என்று கூறியுள்ளார்.
ஏனெனில், ஆசிட் வீசியதாக முதலில் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்தர் மனைவி, தனக்கு எதிராகத் துன்புறுத்தல் வழக்கு கொடுத்ததால் அவரைப் பழிவாங்குவதற்காக எனது அறிவுறுத்தலின் பேரில், தனது மகள் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறி போலீசாரையே தலை சுற்ற வைத்துள்ளார்.
இதையடுத்து அகில் மற்றும் அவரது மகளுக்கு எதிராகப் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில்தான் உண்மை அம்பலமாகியுள்ளது.
















