கோவை டவுன்ஹால் பகுதியில் துணை குடியரசுத் தலைவர் வருகையின்போது விபத்து ஏற்படுத்திய நபர், தான் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதாகக் கூறும் வீடியோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்குத் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவரது வருகையையொட்டி அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகத்துடன் வந்த இரண்டு இளைஞர்கள், காவல் ஆணையர் வாகனத்தை உரசும்படி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இளைஞர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பாஜகவினர் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய இளைஞரின் வீடியோ ஒன்றை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதில், தான் மதுபோதையில் வந்து விபத்து ஏற்படுத்தியதாகவும், காவல்துறைக்கு பயந்து வேகமாக வாகனத்தை இயக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள இந்த வீடியோ பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
















