பெங்களூருவில் விப்ரோ, இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஆர்.வி. பொறியியல் கல்லூரி இணைந்து, WIRIN என்ற இந்தியாவின் சொந்த டிரைவரில்லா காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஐடி தலைநகரமான பெங்களூருவில் WIRIN என்ற பெயரில் இந்தியாவின் சொந்த டிரைவரில்லா காரை, WIPRO, இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஆர்.வி பொறியியல் கல்லூரி இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், உத்தராதி மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ 1008-வது சத்யாத்ம தீர்த்த பாதங்களவர், அந்தக் காரில் அமர்ந்திருக்கும் 28 விநாடி வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மடாதிபதி சுயமாக இயங்கும் காரில் அமைதியாக அமர்ந்து கல்லூரி வளாகத்தைப் பார்வையிட்டபடி பயணித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
முன்மாதிரியாக வடிவமைக்கப்பட்ட இந்தக் கார் கடந்த 27-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் WIPRO நிறுவனத்தின் தானியங்கி அமைப்புகள் பிரிவின் தலைவர் ராமச்சந்திர புத்திஹால், ஆர்.எஸ்.எஸ்.டி தலைவர் எம்.பி ஷியாம் மற்றும் கல்லூரி முதல்வர் கே.என்.சுப்ரமண்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த 6 ஆண்டுகளாகப் பேராசிரியர்களான உத்தரா குமாரி மற்றும் ராஜா வித்யா மேற்பார்வையில் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இந்தக் கார் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பலனாகப் பார்க்கப்படுகிறது.
இதில் ARTIFICIAL INTELLIGENCE, MACHINE LEARNING, VISUAL MONITOR, 5G BASED VEHICLE COMMUNICATION உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















