தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முத்துராமலிங்க தேவர் ஒரு சமுதாயத் சேர்ந்தவர் என்று நினைப்பது நம்முடைய அறியாமையை தான் காட்டுவதாக தெரிவித்தார்.
பிற சமுதாயத்திற்கு அவர் எதிராக இருந்திருந்தால் பேரையூர் வேலுச்சாமி வீட்டிற்கு சென்று எத்தனை முறை உணவருந்தி இருப்பார், எத்தனை முறை தங்கியிருப்பார்.
மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெருமாளை சட்டமன்ற உறுப்பினராக்கி தன்னோடு பயணிக்க வைத்தவர் என்றும் அவர் கூறினார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தளபதியாகவும் முழு நம்பிக்கை பாத்திரமாகவும் இருந்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பார்வர்டு பிளாக் கட்சி தொடங்கிய போது அவருடைய பயணித்தவர் முத்துராமலிங்க தேவர் என்றும் கூறினார்.
கடந்த 25 ஆண்டுகளாக அவருடைய நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் குடியரசு துணை தலைவரான பின்னர உணர்வுப்பூர்வமாக இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
.வரும் காலங்களில் தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும். சாதியில் தான் ஒரு மனிதன் பிறக்க முடியும். சாதியை மாற்றும் வல்லமை யாருக்கும் இல்லை.எல்லா சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என சிபி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
















