ரஃபேல் விமானத்தில் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாகிஸ்தான் படைகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பாகிஸ்தான் அரசின் பொய் பிரசாரத்திற்கு பதிலடி கொடுத்துள்ளதுடன், இந்தியாவின் விமானப்படை வலிமையை உலகிற்கு வெளிச்சம் போட்டும் காட்டியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாகப் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா சில மாதங்களுக்கு முன் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் தீவிரவாத கட்டமைப்புகள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன. அதன்பின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவிடம் மன்றாடிய பாகிஸ்தான், மோதல் போக்கு முடிவுக்கு வந்ததும் இந்தியாவிற்கு எதிராகப் பொய்யான தகவல்களை வெளியிட்டது.
இந்தியாவின் 6 ரஃபேல் விமானங்கள் பாகிஸ்தான் வான்பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்திய விமானியான சிவாங்கி சிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டது.
இதுதொடர்பாகப் பாகிஸ்தான் அரசு வெளியிட்ட வீடியோவில், இந்திய விமானப்படை தளபதி, துக்கத்தில் மூழ்கிய விமானியின் குடும்பத்தாரை சந்தித்தது போன்ற சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், அந்தத் தகவல்களுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த இந்திய அரசு, FACT CHECK பிரிவுமூலம் அவற்றை அடிப்படை ஆதாரமற்றதாகவும், தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டது என்றும் வெளிப்படையாக அறிவித்துப் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தைப் பார்வையிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கிருந்த ரஃபேல் விமானம்மூலம் 30 நிமிடங்கள்வரை வானில் பறந்தார்.
அவருடன் இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் விமானியும், விமானப்படை ஸ்குவார்டரன் லீடருமான சிவாங்கி சிங் இருந்தார். இவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் படைகளால் கைது செய்யப்பட்டதாகப் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட அதே சிவாங்கி சிங் தான். வாரணாசியில் பிறந்த சிவாங்கி சிங் சிறுவயது முதலே விமானப்படை விமானியாக வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டிருந்தார்.
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்தபோதே தேசிய மாணவர் படையின் விமானப் பிரிவில் சேர்ந்த சிவாங்கி சிங், பின்னர் இந்திய விமானப்படையில் இணைந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் பலனாகக் கடந்த 2017-ம் ஆண்டு அவர் இந்திய விமானப்படையின் 2-வது பெண் விமானிகள் குழுவில் அதிகாரியாக இணைந்தார்.
விமானியாகத் தனது திறமைகளைத் திறம்பட வெளிப்படுத்திய சிவாங்கி சிங், கடந்த 2020-ம் ஆண்டு ரஃபேல் விமானத்தை இயக்கும் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். அதில் பிரான்ஸ் பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றிய சிவாங்கி சிங், அதே ஆண்டு ரஃபேல் விமானத்தைத் தனியாக இயக்கி இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் விமானி என்ற பெருமையைத் தனதாக்கினார்.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அசாமில் உள்ள தேஸ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய்-30 MKI ரக விமானத்தில் பறந்திருந்த நிலையில், தற்போது 2-வது முறையாக ரஃபேல் விமானத்தில், குழு கமாண்டர் அமித் கெஹானியுடன் 15 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து அசத்தியுள்ளார்.
ரஃபேல் விமானத்தில் பறந்தது தனக்கு மறக்க முடியாத தருணம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய விமானப்படையின் வலிமையை கண்டுணர்ந்தது தனக்கு பெருமை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விமானப்படையின் சீருடையில் ரஃபேல் விமானத்தில் பறந்த புகைப்படங்களும், ஸ்குவார்டரன் லீடர் சிவாங்கி சிங்குடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானின் பொய் பிரசாரத்திற்கு இந்தியா மீண்டும் ஒருமுறை பதிலடி கொடுத்துள்ளதாகப் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்வுமூலம் பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ள இந்தியா, தன் விமானப்படை மட்டுமல்ல தகவலைக் கையாளும் திறனும் உறுதியானது என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
















