அத்திப்பட்டு புதுநகர் பகுதியை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மோன்தா புயல் காரணமாகக் கனமழை கொட்டி தீர்த்தது.
2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக அத்திப்பட்டு புதுநகரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் அந்தப் பகுதி குளம்போல் காட்சியளித்தது.
வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் சமையல் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல முடியாமல் உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம் மோட்டார்மூலம் தண்ணீரை வெளியேற்றி வந்தாலும், மழைநீர் வற்றவில்லை என்றும், கூடுதலாக மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்திப்பட்டு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைத்து நிரந்த தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















