பிரேசில் ரியோ டி ஜெனிரோவில், இதுவரை இல்லாத அளவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையில், போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட கொல்லப்பட்டுள்ளனர். உண்மையில் ரியோ டி ஜெனிரோவில் என்ன நடந்தது? எதற்காக இந்த ராணுவ நடவடிக்கை ? சோதனை ரத்த களரியாக மாறியது எப்படி ? அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரியோ டி ஜெனிரோ – சாவ் பாலோவுக்கு அடுத்தபடியாகப் பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரம் ஆகும். 1950களில் இருந்து ரியோவின் மக்கள் தொகை அதி வேகமாக வளர்ந்து வருகிறது. போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களும் இந்நகரில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 1970ம் ஆண்டுகளில், ரியோ டி ஜெனிரோ சிறையில், கைதிகளுக்கான சுய பாதுகாப்பு அமைப்பாக RED COMMAND என்னும் அமைப்பு தொடங்கப் பட்டது.
பிறகு ரியோ நகரத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த இடது சாரி போராளிகளுடன் சேர்ந்து, RED COMMAND போராடி வருகிறது. ரியோ டி ஜெனிரோவில் தீவிர இடது சாரி (COMMANDO VERMELLHO) கோமண்டோ வெர்மெல்ஹோ என்னும் RED COMMAND இயக்கம் பிரேசிலின் மிகப் பழமையான மற்றும் சக்தி வாய்ந்த குற்றவியல் அமைப்பாகும்.
கடந்த ஆண்டு, நகரத்தின் பாதிக்கும் மேலான நகராட்சிப் பதவிகளை RED COMMAND கைப்பற்றியது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள COMMANDO VERMELLHO என்ற RED COMMAND அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்த அமெரிக்கா பலமுறை கோரிக்கை வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரேசில் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரிகத் தொடங்கியது. சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் RED COMMAND மீதான மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையைக் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி பிரேசில் அரசு மேற்கொண்டது.
RED COMMAND செயல்பாடுகளை முற்றிலுமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கையில், பல்வேறு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனைக்காக ஃபாவேலாக்களுக்குள் காவல் துறையினர் நுழைந்ததும், போதை கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
நகரம் முழுவதும் நெருப்பு புகை சூழ்ந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டது. உள்ளூர் பல்கலைக்கழக வகுப்புகள் ரத்து செய்யப் பட்டன. காவல் துறையினருக்கும் போதை பொருள் கும்பலுக்கும் இடையே நடந்த இந்த மிகப் பெரிய சண்டையில், பலியானவர்களின் உடல்கள் தெருவில் வரிசையாக வைக்கப் பட்டிருந்த காட்சி பலரையும் பயமுறுத்தும் விதமாக இருந்தது. இது மிகப்பெரிய காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும், கடந்த 30 ஆண்டுகளில் தாம் பார்த்த மிகப்பெரிய படுகொலை இது என்றும் பிரேசில் வழக்கறிஞர் (Flávia Pinheiro Fróes) ஃப்ளாவியா பின்ஹெய்ரோ ஃப்ரோஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும் பிடிபடாமல் தப்பி இருந்த போதை கும்பலைச் சேர்ந்தவர்கள் தலையின் பின்புறத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரியோ டி ஜெனிரோவின் மாநில அரசின் எக்ஸ் பக்கத்தில், ட்ரோன்கள் மூலம் காவல்துறையினரை குறிவைத்து தாக்கும் வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, மத்திய அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காவல்துறை நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை இரண்டு மாதங்களாகத் திட்டமிடப்பட்டு முழுமையான விசாரணையின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டதாகக் கூறியுள்ள ரியோ ஆளுநர் கிளாடியோ காஸ்ட்ரோ, காவல்துறையினர் மீது ட்ரோன்கள் மூலம் வெடிகுணடுகளை வீசியது சாதாரண குற்றமல்ல என்றும், போதைப் பொருள் பயங்கர வாதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்றும், உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரே என்றும் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய இந்தப் போதை பொருள்பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சுமார் 80க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரிய துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் அதிக அளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஒரு பெரிய ஆயுதக் கிடங்கையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த இராணுவ நடவடிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட போதை பொருள் குற்றங்களின் பிரச்சினையைத் தீர்க்காமல், அதிக வன்முறைக்கும், மனித இழப்புக்கு வழி வகுத்துள்ளன என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மறுபுறம், போதைப் பொருள் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் அவசியம் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு மற்றும் C 30 உச்சிமாநாடு நடக்க உள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
















