தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இருகண்களாகப் பாவித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இராமநாதபுரம் ஆளுகைக்கு உட்பட்ட ஜமீன் குடும்பத்தில் 1908-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி உக்கிரபாண்டி – இந்திராணி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அவர் ஆறுமாத குழந்தையாக இருந்தபோதே தாய் மறைந்துவிட்டதால் முத்துராமலிங்கத் தேவருக்கு அன்னையாக இருந்து ஒரு இஸ்லாமியப் பெண் பாலூட்டினார்.
பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த முத்துராமலிங்கத் தேவர் சிலம்பம், மற்போர், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல், வர்மக்கலை போன்வற்றை கற்றுக்கொண்டார். இளமைக் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டுவந்த முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடனான சந்திப்பு.
அதைத்தொடந்து தென் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த முத்துராமலிங்கத் தேவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் சக்தியைத் திரட்டினார். குற்றப்பரம்பரைச் சட்டம் மற்றும் ஜமீன்தாரி முறைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய முத்துராமலிங்கத் தேவர் பட்டியலின மக்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
குறிப்பாக ஆங்கிலயே ஆட்சியாளர்கள் கொண்டுவந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார். 1871-ல் வெள்ளைக்காரர்கள் அறிமுகப்படுத்திய குற்றப்பரம்பரைச் சட்டம் பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு 1924-ஆம் ஆண்டு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு சாதியையும் ‘குற்றப்பரம்பரை’ என அரசு அறிவிக்கலாம்.
அதாவது ஒரு சாதியில் பிறந்த அனைவரும் பிறவிக்குற்றவாளிகள் என முத்திரை குத்தலாம். தமிழகத்தில் கள்ளர், மறவர் உட்பட 80-க்கும் மேற்பட்ட சாதிகள் குற்றப்பரம்பரைச் சட்டப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அதனால் கடும் இன்னல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. குற்றப்பரம்பரைச் சட்டப் பட்டியலில் இருக்கும் சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையை காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக் கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் உறங்க வேண்டும். பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் அனுமதி பெற வேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இத்தகைய அடக்குமுறைக்கு எதிராக 1920-ஆம் ஆண்டு உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள பெருங்காமநல்லூரில் பெரும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். ‘கைரேகைச் சட்டமென்றும்’ அழைக்கப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் பணியில் முத்துராமலிங்கத் தேவர் ஈடுபட்டார். கட்டை விரலை வெட்டிக்கொள்ளுங்கள் அல்லது சிறைக்குச் செல்லுங்கள், ஆனால் ரேகை மட்டும் வைக்காதீர்கள் எனக் கிராமங்கள்தோறும் முழங்கினார்.
அவரது பேச்சு தங்களுக்கு எதிராக மக்களைத் திருப்புகிறது என்பதை அறிந்த ஆங்கிலேயே அரசாங்கம் வாய்ப்பூட்டுச் சட்டத்தின் கீழ் முத்துராமலிங்கத் தேவர்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியது. இருப்பினும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தமது பணியைத் தொடர்ந்தார் முத்துராமலிங்கத் தேவர்.
1937-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியின் வேட்பாளராக அப்போதைய சேதுபதி மன்னர் நாகநாதனை நீதிக்கட்சி களமிறக்கியது. அவரை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முத்துராமலிங்கத்தேவர் செல்வாக்குமிக்க மன்னரை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோஸ் அதிலிருந்து விலகி அகில இந்திய FORWARD BLOC என்ற கட்சியைத் தொடங்கியபோது முத்துராமலிங்கத் தேவரும் அதில் இணைந்து செயல்பட்டார். 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்ட முத்துராமலிங்கத் தேவர் இரண்டிலும் வெற்றிபெற்றார்.
பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அவர் M.P.-ஆக பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரையே அனைவரின் கவனத்தையும் பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாத அய்யர் முயன்றபோது அவருக்குத் துணையாக நின்றவர் முத்துராமலிங்கத் தேவர்.
பிரச்னை செய்பவர்களைச் சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என அவர் துண்டுப் பிரசுரம் வெளியிட்டதும் அனைவரும் ஒதுங்கிக்கொண்டார்கள். நாட்டின் விடுதலைக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவந்த முத்துராமலிங்கத் தேவர் தமது வாழ்நாளில் 4 ஆயிரம் நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்தவர்.
1963-ஆம் ஆண்டு தமது பிறந்தநாளான அக்டோபர் 30-ஆம் தேதி இந்த மண்ணைவிட்டு மறைந்துவிட்டாலும் லட்சக்கணக்கானோரின் உள்ளத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் முத்துராமலிங்கத் தேவர்.
















