முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பயணம் செய்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் அவரின் கட்சி பதவிகளை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இதனால் இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பயணம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கார் வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே வழியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்து காரில் பயணித்தார். இதையடுத்து மூவரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
















