நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி விற்பனை வழக்கில் தற்போது வரையிலான விசாரணை அறிக்கையைக் காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சத்தீஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை, தென் மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைகுறித்த அறிக்கையைச் சீலிடப்பட்ட கவரில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், கிட்னி விற்பனை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகலைத் தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் தகவலை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் விசாரணை அறிக்கையை நவம்பர் 11ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.
 
			 
                    















