தெருநாய்க் கடி விவகாரம் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தெருநாய்க் கடியால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் வழிமுறைகள் வகுத்துப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தெருநாய் கடி விவகாரம் தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
நீதிபதி விக்ரம் நாத் தலையிலான அமர்வில், தலைமைச் செயலாளர்கள் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியும் 2 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
எனவே, தெருநாய் கடி விவகாரத்தில் பிற தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அதிகப்படியான நபர்கள் வருவார்கள் என்றால், ஒரு அரங்கத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.
 
			 
                    















