கனடாவில் கார் மீது சிறுநீர் கழித்த நபரை கண்டித்த இந்திய வம்சாவளி நபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் எட்மண்டன் நகரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இந்திய வம்சாவளி நபரான அர்வி சிங் சாகூ, உணவகம் ஒன்றில் தனது மனைவியுடன் உணவருந்தி விட்டுக் காருக்குத் திரும்பியுள்ளார்.
அப்போது, 40 வயது மதிக்கத் தக்க ஒருவர் காரின் மீது சிறுநீர் கழித்துக்கொண்டிருக்க, அதை அர்வி சிங் சாகூ தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு முற்ற, ஒரு கட்டத்தில் அர்வி சிங் சாகூ தலையில் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இதனால் தரையில் சரிந்து விழுந்த அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில், தாக்குதல் நடத்தியவரைக் காவல்துறை கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
 
			 
                    















