560க்கும் மேற்பட்ட சுயாட்சி மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்தநாள் விழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் ஆளுநர் ராம்மோகன் ராவ், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கோபாலசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 560க்கும் மேற்பட்ட சுயாட்சி மாநிலங்களை ஒன்றிணைத்து, இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்றும் இது ஒரு சாதாரண அரசியல் சாதனை அல்ல, மிகப் பெரும் தியாகத்தாலும், திடமான மனவுறுதியாலும், தெளிவான பார்வையாலும் நடந்தது என்றும் கூறினார்.
ஹைதராபாத், மணிப்பூர் போன்ற மாநிலங்களின் இணைப்பிற்கு பட்டேலின் தைரியமான முடிவுகளே காரணம் எனத் தெரிவித்தார். அவரின் அரசியல் திறமை, சிறந்த நிர்வாகம் மற்றும் தலைமைத்துவத்தின் பாடமாக உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.
















