இந்திய வம்சாவளி தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட் என்பவர் சுமார் 4 ஆயிரத்து 170 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் உலகளாவிய நிதிச் சந்தையையே உலுக்கியுள்ளது.
உலகளாவிய நிதிச் சந்தையில் பிளாக்ராக் நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் கேரியாக்ஸ் கேபிடல் எனும் நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான இந்திய வம்சாவளி தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட், பல கோடி ரூபாய்களை கடனாகப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடப்பாண்டின் தொடக்கத்தில், பிளாக்ராக் நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கான சில மின்னஞ்சல் முகவரிகளில் சீரற்ற தன்மைகளைக் கண்டறிந்துள்ளார்.
விசாரணையில் டெலிகாம் நிறுவனங்களுக்கு வர வேண்டிய பணத்தை நிதியுதவி செய்ததாகக் கூறி, அதைச் சட்டப்பூர்வ பிணையாகக் காட்டி, சுமார் 4 ஆயிரத்து 170 கோடி ரூபாய் மோசடியில் பங்கிம் பிரம்மபட் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த மோசடியை நம்பகத்தன்மையுடன் காட்டுவதற்காக, பிரம்மபட் குழுவினர் தொலைத்தொடர்பு ஜாம்பவான்களின் போலி மின்னஞ்சல் டொமைன்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இனி மோசடியை மறைக்க முடியாது எனும் சூழலில் பங்கிம் பிரம்மபட்டின் கேரியாக்ஸ் கேபிடல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளி தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட்டிடம் இருந்து மோசடி பணத்தை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது.
















