பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்ட நிலையில் ஆண்ட்ரூவை, வின்ட்சர் எஸ்டேட்டில் உள்ள அவரது ராயல் லாட்ஜ் அரண்மனையை விட்டு வெளியேறுமாறு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உத்தரவிட்டுள்ளார். இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டபின் முன்னாள் இளவரசர் எதையெல்லாம் இழப்பார்? அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம், சீனா உடனான தொடர்பு போன்ற பிரச்சனைகளால் பிரிட்டன் அரச குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூவின் அரசப் பட்டம் மன்னரால் பறிக்கப்பட்டது. இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டதும், தாமாகவே முன்வந்து Duke of York, Earl of Inverness, Baron Killyleagh ஆகிய தனது பிற அரச பட்டங்களையும் துறப்பதாக ஆண்ட்ரூ தெரிவித்திருந்தார்.
Order of the Garter and Knight Grand Cross of the Victorian Order என்ற பட்டங்களையும் இழந்துள்ளார். மேலும் இனி அவருக்கு His Royal Highness என்று உரிமை கிடைக்காது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் லண்டன் பெருநகர காவல் துறை, முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது தம்பியும் இளவரசர்களில் ஒருவருமாகிய ஆண்ட்ரூவை வின்ட்சர் எஸ்டேட்டில் 8,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அவரது வசிப்பிடமான ‘ராயல் லாட்ஜ் அரண்மனையை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
அரச குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் மன்னர் சார்லஸ் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆண்ட்ரூவுக்கு எதிராக இந்த நடவடிக்கைக்கு இளவரசர் வில்லியம் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இனி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று மட்டுமே அழைக்கப்படுவார் என்றும் ராயல் லாட்ஜ் அரண்மனையை விட்டு வெளியேறும் அவர் மாற்று தங்குமிடத்தைத் தனியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இளவரசி பீட்ரைஸ், தனது தந்தை ஆண்ட்ரூ வசிக்கும் ராயல் லாட்ஜ் அரண்மனையை விட்டு வெளியேறி உள்ளார். முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ ( Norfolk) நோர்போக்கில் உள்ள (Sandringham Estate) சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டுக்குச் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 8000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனை ஒரு காலத்தில் மகாராணி எலிசபெத்துக்கு விருப்பான ஓய்வு இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்ட்ரூவின் தங்குமிடத்துக்குப் பிரிட்டிஷ் மன்னரால் தனிப்பட்ட முறையில் நிதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பட்டங்கள் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறியபோதும் ஆண்ட்ரூ ஒரு அரச குடும்பத்தின் இரண்டு சலுகைகளை மட்டும் தக்க வைத்துக் கொள்வார்.
ஒன்று வாரிசு உரிமையாகும். வாரிசு உரிமையில் இருந்து நீக்கப் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட வேண்டும். கூடவே சார்லஸ் மன்னராக இருக்கும் கனடா உட்பட மற்ற 14 நாடுகளின் ஒப்புதலும் பெற வேண்டும்.
இளவரசர் வில்லியம், இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட், இளவரசர் லூயிஸ், இளவரசர் ஹாரி, இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் ஆகியோருக்குப் பிறகு எட்டாவது நபராக இடத்தில் வாரிசு உரிமையுடன் ஆண்ட்ரூ இருப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு சலுகை மாநில ஆலோசகராக இருப்பது ஆகும்.
ஆண்ட்ரூ அரச நிகழ்வுகள் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கப் படுவார். அரசு குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகள், நினைவுச் சடங்குகள் போன்ற தனிப்பட்ட, குடும்ப நிகழ்வுகளுக்கு மட்டுமே அவருக்கு அழைப்பு கொடுக்கப்படும். அமெரிக்காவை சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், பிரபல அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் இளவரசருமான ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அப்போது பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் இளவரசர் ஆண்ட்ரூ மீது எடுக்கப்படவில்லை. கடந்த 2022ம் ஆண்டு நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு ஒப்பந்தத்தின் மூலம் வழக்கை முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ முடித்துக் கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா தற்கொலை செய்து கொண்டார்.
வர்ஜீனியாவின் சுய சரிதை Nobody’s Girl: A Memoir of Surviving Abuse and Fighting for Justice என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதில், ஆண்ட்ரூ தன்னுடன் உறவு வைத்துக் கொள்வது தனது பிறப்புரிமை என்று நம்பியதாகக் குறிப்பிட்டிருந்தார். இதுவே, தனது பட்டங்களையும் பதவிகளையும் இழந்து, முன்னாள் பிரிட்டன் இளவரசரை அரண்மனையை விட்டு வெளியேற வைத்துள்ளது.
















