கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை, காவல்துறை விசாரணையில் குறைபாடு இருந்ததால் விடுதலை செய்து சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை சேத்துபட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கூறி தங்கையா, பாலசுப்பிரமணியன், பாலாஜி ஆகிய 3 பேரை கடந்த 2015-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கானது சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், கைதுக்கான காரணத்தை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களிடம் போலீசார் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்னரே, குற்ற எண் கொடுக்கப்பட்டதாகவும், பொது சாட்சிகள் எவரையும் போலீசார் வழக்கில் சேர்க்கவில்லை எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து, காவல்துறை வழக்கு விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, தங்கையா, பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
















