திரைப்படத் தணிக்கை குழுவிற்கு(Censor Board) ABVP தென் தமிழகம் மாநில செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :: நாட்டின் ஒற்றுமையும் இளைஞர் மனநிலையும் பாதிக்கக் கூடிய பல திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
சமூக முன்னேற்றத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்தியாவில், இன, சாதி, மத அடிப்படையில் மீண்டும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் வகையில் சில இயக்குநர்கள் திரைப்படங்களை உருவாக்குவது பொறுப்பில்லாத செயல் என கூற வேண்டியுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த “Bison” திரைப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. இதில், சாதி அடையாளங்களை வெளிப்படையாகப் பயன்படுத்தி, தேசத் தலைவர்களை மறைமுகமாக ஜாதி தலைவர்களாக விமர்சிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய காட்சிகள் இளைஞர்களின் மனதில் குழப்பத்தையும் சமூகத்தில் விரோத உணர்வுகளையும் உருவாக்கக்கூடியவை.
இத்தகைய படங்களுக்கு திரைப்படத் தணிக்கை குழு (Censor Board) எந்தக் கடுமையான ஆராய்ச்சியும் இன்றி (A அல்லது U/A) போன்ற சான்றிதழ்கள் வழங்கி அனுமதி அளிப்பது அதிர்ச்சி தரக்கூடியது.
சான்றிதழ் அளிப்பது மட்டுமே தணிக்கை குழுவின் கடமையாகாது; திரைப்படம் சமூக ஒற்றுமையைப் பாதிக்குமா, மத-சாதி உணர்வுகளைத் தூண்டுமா என்பதைச் சீராக பரிசீலிப்பது அவர்களின் முதன்மை பொறுப்பு ஆகும்.
தணிக்கை குழு இன்று ‘உறங்கிக் கிடக்கும் அமைப்பாக’ மாறி விட்டது என்பதே நிலைமை. சமூகச் சூழ்நிலையைக் கவனிக்காமல், வணிக நோக்கில் மட்டுமே திரைப்படங்களுக்கான சான்றிதழ்களை வழங்குவது தேசிய நலனுக்கு எதிரானது.
எனவே, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தென் தமிழகம், இத்தகைய சமூக ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கை குழுவின் செயல்முறைகளை கடுமையாகக் கண்டிக்கின்றோம்.
மேலும் இன, சாதி, மத அடிப்படையில் பிரிவினை தூண்டும் காட்சிகள் மற்றும் உரைகளுக்கு தணிக்கை குழு கடுமையான தடை விதிக்க வேண்டும். மாநில அரசுகள் இத்தகைய திரைப்படங்களின் திரையிடலை மீளாய்வு செய்ய வேண்டும்.
திரைப்படங்கள் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டுமே அன்றி, சமூகத்தைப் பிரிக்கக்கூடிய கருவியாக மாறக்கூடாது என்பதை ABVP வலியுறுத்துகிறது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















