உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகளின் செயல்பாடு, அபார திறமை தன்னம்பிக்கையுடன் அமைந்ததாகவும் புகழாரம் சூட்டினார்.
இந்தப் போட்டித் தொடர் முழுவதும் அணி சிறப்பான குழு செயல்பாடு மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தியதாகவும், நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வரலாற்று வெற்றி, வருங்கால சந்ததியினர் விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுத்து சாம்பியன்களாக ஊக்கமளிக்கும்.” என்றும் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில், “உலக சாம்பியன் ஆன இந்திய அணிக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுகள் என கூறியுள்ளார். ஐசிசி மகளிர் உலகக் கோப்பை-ஐ நமது அணி வென்றுள்ள இந்தத் தருணம், தேசத்திற்கே ஒரு மணிமகுடம் சூட்டியது போல, இந்தியாவின் பெருமையை வானளாவ உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், வீராங்கனைகளின் அசாத்தியமான திறமைகள், கோடிக்கணக்கான இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த அணிக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று வெற்றியை பெற்ற இந்திய மகளிர் அணிக்கு மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய கிரிக்கெட்டுக்கு உண்மையிலேயே பெருமையான தருணம் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல், மத்திய அமைச்சர் எல். முருகன், இந்திய மகளிர் அணியின் உறுதி, கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி என புகழாரம் சூட்டியுள்ளார்.
















