தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா மலரை வெளியிட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் 60 வயதை எட்டியதை அடுத்து மணிவிழா மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி, மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பயனாளிகளுக்கு செயற்கை கால் நலத்திட்ட உதவிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். மேலும், இந்த விழாவில் குன்றக்குடி ஆதீன பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் சபாபதி தம்பிரான் சுவாமிகள், மேகாலயா முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















