திமுக ஆட்சியில் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வ.உ.சி திடலில், தெற்கு மாவட்ட பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசால் முடியும் என்றும், ஆனால், நதியை பராமரிப்பது மாநில அரசின் கடமை எனவும் கூறினார்.
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவதாக கூறிய அவர், கூட்டணி என்பது ஒரு இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே அமைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
















