கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணமானது அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகுறித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், 1987ம் ஆண்டு ஆற்றிய உரைகளில் சில குறிப்புகள் பயன்படுத்தப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடாவுடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுவார்த்தை அனைத்தையும் நிறுத்தி வைத்தும், அந்நாட்டு பொருட்களுக்கான வரியை 10 சதவீதம் அதிகரித்தும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த விளம்பரத்தை ஒளிபரப்புவதை கனடா அரசு நிறுத்தியது. அதற்காகத் தென்கொரியாவில் நடந்த ஆசியா பசுபிக் மாநாட்டின்போது, டிரம்ப்பிடம் தனிப்பட்ட முறையில் மார்க் கார்னி மன்னிப்பும் கோரினார்.
இந்நிலையில் கனடா வெளியிட்ட போலியான விளம்பரம் தனக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டதால், அந்நாட்டுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ‘
டிரம்ப்பின் முடிவு கனடா – அமெரிக்கா உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
















