தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் கொடிக்கம்பங்களை வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு, சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது
மேலும், இதுதொடர்பாகத் தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், சாலையோரம் கொடிக்கம்பங்கள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளது.
அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், கொடிக்கம்பங்கள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு மனுவைத் தள்ளுபடி செய்ததாகத் தெரிவித்தனர்.
அதேவேளையில், கொடிக்கம்பம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
எனவே, இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் பட்டியலிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















