உலகை அதிரவைக்கும் பல நிகழ்வுகள் 2026-ம் ஆண்டு நடைபெறும் எனப் பிரபல தீர்க்கதரிசியான பாபா வாங்கா குறிப்பிட்டுள்ள நிலையில், வரும் ஆண்டில் மனிதக் குலம் போர், பேரழிவு, வெளி கிரகவாசிகளின் வருகை மற்றும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி எனப் பல புதிய சவால்களை எதிர்கொள்ள் நேரிடும் என நம்பப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா கடந்த 1911-ம் ஆண்டு பிறந்து 1996-ம் ஆண்டு மறைந்தார். வங்கேலியா பாண்டேவா திமித்ரோவா என்ற இயற்பெயர் கொண்ட இவர், உலகளவில் புகழ்பெற்ற தீர்க்கதரிசியாகப் பார்க்கப்படுகிறார். தனது சிறு வயதில் இயற்கைப் பேரிடர் ஒன்றில் சிக்கிய பாபா வாங்கா, அதில் தனது கண் பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது.
பிந்தைய காலங்களில் பல அமானுஷ்யச் சக்திகள் தனது ஞானதிருஷ்டியில் தோன்றியதாகக் கூறிவந்த அவர், தனது மரணம் உட்பட பல தீர்க்கதரிசனங்களை முன்னரே கணித்துக் கூறி உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார். குறிப்பாக உலகப் போர்கள், அரசியல் மாற்றங்கள், இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளைப் பாபா வாங்கா, நடக்கும் முன்னரே உலக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
அவரின் கணிப்புகள் ஏராளமான மக்கள் மனதில் மர்மமும், நம்பிக்கையும் கலந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்றளவும் பாபா வாங்கா கூறிய பல தீர்க்கதரிசனங்கள் உலகளவில் விவாதத்திற்குரியவையாகத் திகழ்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில், பாபா வாங்கா வரும் 2026-ம் ஆண்டில், உலகை அதிரவைக்கும் பல நிகழ்வுகள் நடக்கவுள்ளதை முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. உலகையே மாற்றும் அளவிற்குப் பெரிய போர்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வரும் ஆண்டில் நிகழும் எனப் பாபா வாங்கா கணித்துள்ளார்.
அதேபோல, வெளி கிரக வாசிகள் 2026-ல் முதல்முறையாகத் தொடர்பு கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் அவர் தீர்க்கதரிசனம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அவரது தீர்க்கதரிசனங்களின்படி, 2026-ம் ஆண்டு கிழக்கில் தொடங்கும் ஒரு போர், மேற்கு நாடுகளுக்கும் பரவி பெரும் அழிவை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்ய அதிபராக உள்ள விளாடிமிர்ப் புதின் “உலகின் தலைவர்” எனப்படும் நிலைக்கு உயர்வார் எனச் சொல்லப்படுகிறது.
அண்மைக்காலமாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், தைவானுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளும் கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்நிலையில், இவை அனைத்தும் ஒன்றிணைந்து உலகப் போருக்கு வழிவகுக்கும் எனப் பாபா வாங்கவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி 2026-ம் ஆண்டு நவம்பரில் ஒரு மிகப்பெரிய விண்கலம் பூமிக்கு வரும் எனவும், அப்போது மனிதர்கள் மற்றும் வேற்று கிரகவாசிகளிடையே முதல்முறையாக அதிகாரபூர்வ தொடர்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கணிப்புகள் பலரால் நம்ப முடியாமல் இருந்தாலும், அவரது வாக்குகளை நம்பும் ஏராளமானோர் இவை அனைத்தும் நடப்பது சாத்தியம் எனக் கருதுகின்றனர். அத்துடன் வரும் ஆண்டில் இயற்கைப் பேரழிவுகளும் அதிகளவில் இருக்கும் எனவும், பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் காரணமாகப் பூமியில் 7 முதல் 8 சதவீத நிலப்பரப்பு மாறும் என்றும் பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் கூறுகிறது.
அவரது கூற்றின்படி நடக்கும் பட்சத்தில் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கும் நிலை உருவாகும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, 2026-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு மனிதர்களை ஆளும் நிலை உருவாகும் எனத் தெரிவித்துள்ள பாபா வாங்கா, இதனால் மனிதக் குலத்தின் வேலைகள், உறவுகள் உட்பட அன்றாட வாழ்க்கை அனைத்தும் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். பிரான்ஸ் ஜோதிடரான நாஸ்ட்ரடாமஸும், பாபா வாங்காவின் இந்தக் கூற்றுக்கள் உண்மையாக நடக்கும் எனக் கூறியிருப்பது, உலக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப் பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள், உலக மக்கள் எதிர்கொள்ள அஞ்சும் பல அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில், வரும் 2026-ம் ஆண்டு மனித வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















