மாணவி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டதை கண்டித்துக் கோவையில் தீப்பந்தம் ஏந்தி பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்குவந்த மர்ம நபர்கள் 3 பேர் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் செய்தனர்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவி வன்கொடுமைச் செய்யபட்டதை கண்டித்துக் கோவை செஞ்சிலுவைச் சங்கம் பகுதியில் பாஜகத் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியும், பெப்பர் ஸ்ப்ரே ஏந்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்த பாஜகத் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், இது கோவைக்கே அவமானம் என்றும் தெரிவித்தார்.
சம்பவ நடந்த இடத்தில் சட்டவிரோதமாக மதுபான பார் ஒன்று இயங்கி வருவதாகவும், அதனைக் காவல்துறை கண்டுகொள்ளாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நாளைப் போராட்டம் நடத்த உள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
			















